துணை முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ஒ.ராஜா தேனி ஆவின் தலைவராக இருந்து வந்ததை மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த வாரம் ரத்து செய்தது. இந்த நிலையில் மீண்டும் தேனி ஆவின் தலைவராக இன்று ஓபிஎஸ் தம்பி ஒ.ராஜா பதவி ஏற்கப் போகிறார் என்ற பேச்சு தேனியில் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த பதவியேற்பு விழாவிற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வரவே நாம் விசாரணையில் இறங்கினோம்.
கடந்த1965 ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை ஆவினுக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. அந்த அளவிற்கு தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களை கொண்ட மதுரை ஆவினைதான் கடந்த ஆண்டு இரண்டாக பிரித்து மதுரை ஆவின், தேனிஆவின் என தனித்தனியாக இயங்க ஆரம்பித்தது. இதனால் தேனி ஆவினில் 17 இயக்குனர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரம் பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி துணைமுதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு அதோடு 17 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் தேனி என்.ஆர்.டி நகரில் வாடகை கட்டடம் எடுத்து தேனி ஆவின் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் ஒபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார்.
அதை தொடர்ந்து பொதுக்குழுவை கூட்டி, தலைவர், துணைத் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும் ஆனால் ஓ.ராஜா தனிச்சையாக தன்னை தேனி ஆவின் தலைவராக அறிவித்துக் கொண்டார் என கூறி தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதோடு கடந்த 23ம் தேதி ஓ.ராஜா மற்றும் இயக்குனர்களின் நியமனத்தை திடீரென ரத்து செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்தான் மீண்டும் ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் படுஜோராக தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் நடைபெறுவதையொட்டி ஏற்கனவே வழக்கு தொடர்ந்த பி.சி.பட்டியை சேர்ந்த அம்மாவாசிடம் கேட்டபோது, கோர்ட் உத்தரவுபடி சட்டத்துக்கு உட்பட்டு பொதுக்குழுவை கூட்டவில்லை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களையே வைத்து மீண்டும் ஒ.ராஜா தேனி ஆவின் தலைவராக வர இருக்கிறார். இது சம்பந்தமாக தேனி பால்வளத்துறை துணை பதிவாளரிடம் புகார் கொடுத்து இருக்கிறேன் அதோடு மீண்டும் கோர்ட்டுக்கு போக இருக்கிறேன் என்று கூறினார்.
இதுபற்றி தேனி பால்வளத்துறை துணைப் பதிவாளர் லட்சுமியிடம் செல் போன் மூலம் கேட்டபோது, எனக்கு தற்போது உடல்நலம் சரியில்லை, என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று கூறி லையனை கட் செய்து விட்டார். ஆனால் திடீரென ஒபிஎஸ் தம்பி ஒ.ராஜா மீண்டும் தேனி ஆவின் தலைவராக பதவி ஏற்க இருப்பது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.