பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்னியர் சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறுகட்டப் போராட்டம், மனுகொடுத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 30-ந் தேதி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அங்கிருந்த தாசில்தார் பரிமளா தேவியிடம் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
இதில், மாவட்டச் செயலாளர் பிரபு, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அருள்மொழி, ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர். "ஏற்கனவே வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்தாச்சு அடுத்து வருவாய் அலுவலர் எனப்படும் ஆர்.ஐயிடம் கொடுத்தாச்சு, இப்போது தாசில்தாரிடமும் அதே மனுக்கள் கொடுத்தாகி விட்டது. இந்த மனுக்கள் பண்டல்களாக முதல்வர் அலுவலகம் போய்ச் சேருகிறது. அடுத்து யாரிடம் மனு கொடுப்பது?" என பா.ம.க. நிர்வாகிகள் கட்சித் தலைமையின் அறிவிப்புக்குக் காத்திருக்கிறார்கள்.