கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், சத்திரம், வெங்கடாம்பேட்டை, அப்பியம்பேட்டை, பத்திரக்கோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குள்ளஞ்சாவடி அடுத்த சத்திரம், பாச்சாரப்பாளையம், கோரணபட்டு, அப்பியம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பியம்பேட்டை கண்ணன், சத்திரம் காசிராஜன் ஆகியோர் பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்தனர். அதில் வெங்கட்டாம்பேட்டை பொன்னுரங்கம், வெற்றிவேல், முத்துக்குமரன், செந்தாமரைக்கண்ணன், பாச்சாரப்பாளையம் பரமசிவம், செஞ்சிவேல், கோரணப்பட்டு கனகராஜ், அப்பியம்பேட்டை கணபதி உள்ளிட்ட 9 விவசாயிகளிடம் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான 14 லாரி பன்னீர் கரும்பை வெட்டி ஏற்றியுள்ளனர். அவைகளுக்கு பணம் கேட்டதற்கு, கரும்பை எடுத்து சென்று விட்டு, பின்னர் வந்து பணம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு கரும்பு விவசாயிகள் 'பணம் கொடுத்த பின்பு, கரும்பு ஏற்றிய லாரி எடுத்துச் செல்லுங்கள்' என சொல்லியுள்ளனர். மாலை பணத்துடன் வருவதாக சென்ற கண்ணன் ஏழு நாட்களாக வரவில்லை.
இதனால் ஏற்றிய கரும்பை எங்கு எடுத்துச் செல்வது?, யாரிடம் கொண்டு சேர்ப்பது? என தெரியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர். இதனால் லாரிகளை சத்திரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்தனர். மேலும் கரும்புக்கு முன்பணம் மட்டும் வாங்கிய விவசாயிகள் வியாபாரிகளிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் லாரி டிரைவர்கள் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹீர், நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் கரும்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விஜயதாரணி என்ற பெண் விவசாயிக்கு முழு தொகையும் அளிக்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் உரிய தொகை முழுவதும் செலுத்தி விடுவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.