விழுப்புரம் மாவட்டம் மலையனூர் அருகே நூறு ரூபாய்க்காக கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை சேர்ந்த வடபாலை எனும் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இருவரும் திருஷ்டிக்கு தேவையான பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் மேல்மலையனூர் அருகே திருஷ்டி கட்ட பயன்படும் கருடன் கிழங்கு எனும் கிழங்கை பறிக்க சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருஷ்டி பொருட்கள் விற்கும் வியாபாரியான தனசேகரன் என்பவரும் அதே பகுதிக்கு கருடன் கிழங்கு பறிக்க சென்றுள்ளார்.
நேற்று கருடன் கிழங்கு பறித்து கொண்டிருந்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தனசேகரன் தனக்கு ஏற்கனவே தரவேண்டிய நூறு ரூபாயை முருகேசனிடம் கேட்டிருக்கிறார். அப்போது நூறு ரூபாயை தரமறுத்திருக்கிறார் முருகேசன். இதனால் இருவருக்கு நடந்த வாக்குவாதத்தில் தனசேகரன் கீழே கிடந்த கற்களை எடுத்து முருகேசனை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
முருகேசனின் மனைவி சித்ரா எவ்வளவு தடுத்தும் கூட தனசேகரன் தாக்க மயக்கமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் செஞ்சி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தனசேகரனிடம் விசாரணை மேற்கொண்டதில் 100 ரூபாய்க்கு முருகேசன் அடித்து கோல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் திருவள்ளூர் திருத்தணியில், இளைஞர் ஒருவர் கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஹோட்டலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதேபோல் மதுரையில் கடனுக்கு டீ தர மறுத்த டீக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.