தமிழ்நாடு காவல்துறை தலைவரான டி.ஜி.பி. திரிபாதியின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. புதிய டி.ஜி.பி.யைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் 28ஆம் தேதி திங்கட்கிழமை (இன்று) டெல்லியில் நடக்கிறது. அதில் கலந்துகொள்ள தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி ஆகிய மூவரும் நேற்று மாலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த ஆலோசனையில், புதிய டிஜிபி யார் என்பது முடிவாகும். பொதுவாக, டிஜிபி நியமனத்திற்கு மட்டும் சீனியாரிட்டிப்படி 3 பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து, அதனை மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை மாநில அரசு தேர்வு செய்யும். இந்த நிலையில், இந்தமுறை மிகத் தகுதியான 5 அதிகாரிகளைக் கொண்ட பட்டியலை அனுப்பிவைக்குமாறு கோட்டையிலிருந்து டெல்லியிடம் கேட்கப்பட்டிருக்கிறதாம். நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக தமிழ்நாடு உயரதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.
இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, "டிஜிபி அந்தஸ்தில் 8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களில் நேர்மையான, எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத அதிகாரியைப் புதிய டிஜிபியாக நியமிக்க வேண்டும்" என்று சொல்கின்றனர்.