தமிழக அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து மையம் என்கிற அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் பழுதடைந்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது.
இதற்கு உதாரணம் கஜா புயலில் ஏழைக் குழந்தைகள் செல்லும் அங்கன்வாடி மையத்தின் மேல்கூரை உடைந்து தொங்கிக் கொண்டிருப்பதை பலமுறை கிராம மக்கள் முறையிட்டும் அதை அலட்சியமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு அந்த கட்டிடங்களும் மழைக்கு தண்ணீர் ஊற்றும் நிலையில் இருந்தாலும் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மட்டும் இன்னும் பழைய சிமென்ட் சீட்டுகளுடன் உள்ளது. கறம்பக்குடியில் இருந்து கருக்காக்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது பட்டத்திக்காடு ஊராட்சி.
இங்குள்ள ஏழைக்குழந்தைகளின் நலக்காக உருவாக்கப்பட்ட அங்கன்வாடி மையம் சிமென்ட் சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிமென்ட் சீட்டுகள் கஜா புயலில் உடைந்து தொங்கிக் கொண்டிருப்பதுடன் உச்சி வெயில் மண்டையில் அடிக்கும். தூரல் கூட அங்கன்வாடிக்குள் தான் விழும். உணவுப் பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அங்கன்வாடி மையத்தை மராமத்து செய்து கொடுங்கள் என்று ஊராட்சி ஒன்றிய அதகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலனில்லை. அதனால் உள்ளூர் இளைஞர்கள் வெயிலுக்காக தார்பாய் கட்டி இருந்ததும் காற்றில் பறந்து போய்விட்டது. அதனால் தற்போது உடைந்த நிலையிலேயே உள்ளது. அதன் அருகிலேயே பழடைந்த மற்றொரு ஓட்டுக்கட்டிடம் ஆபத்தான நிலையில் ஓடுகள் கொட்டிக் கொண்டிருக்கிறது.
இதேபோல கறம்பக்குடி பேரூராட்சிக்குள்ளும் சிமென்ட் சீட் உடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் உள்ளது.
இதுகுறித்து உள்ளூர் இளைஞர்கள் கூறும்போது.. பட்டத்திக்காடு கிராமத்தில் எல்லாரும் கூலி வேலைக்கு போற மக்கள்தான். அதனால தனியார் பள்ளிகளின் எல்.கே.ஜி., யூகே.ஜி சேர்க்க வசதி இல்லை. அதனால சுமார் 30 குழந்தைகள் இந்த அங்கன்வாடிக்குதான் அனுப்புறாங்க. புயல்ல அதுவும் உடைந்து போச்சு. பலமுறை சீரமைக்க சொல்லியும் நடவடிக்கை இல்லை. அதனால் குழந்தைகளின் உயிருக்கு பயந்தே பல குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புறதை நிறுத்திட்டாங்க. இந்த வருசத்தோட மொத்த குழந்தைகளையும் நிறுத்தப் போறாங்க. ஏழைக் குழந்தைகள் பயன்படுத்தும் கட்டிடம் என்பதால் அதிகாரிகள் இப்படி அலட்சியம் காட்டலாமா? ஏதாவது விபத்து நடந்தால் அதன் பிறகு வந்து சமாதானம் சொல்வாங்க. அதேபோலதான் கறம்பக்குடி நகரிலும் உள்ள அங்கன்வாடி இருக்கு. மற்ற ஒன்றியங்களில் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் கறம்பக்குடி ஒன்றியம் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை என்றனர். விபத்துகள் நடப்பதற்கு முன்னே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.