ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் இன்று மதுரை மேலூரில் நடக்கும் விழாவில் கட்சிப் பெயர், கொடியை அறிவிக்கிறார்.
முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராக முயற்சி செய்ய, அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் ஓ.பன்னீர்செல்வம். இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டது. இருதரப்பும் தனித்தனியாக ஆர்.கே.நகர் தேர்தலை சந்தித்தன.
பின்னர் முதல்வர் பழனிசாமி, தினகரன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பழனிசாமி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் அவர்களுக்கே கிடைத்தது. அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
இதனிடையே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வசதியாக தனக்கு அனைத்திந்திய அம்மா அதிமுக, எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் குக்கர் சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கவும், அவர் கோரிய 3 பெயர்களில் ஒன்றை கட்சிப் பெயராக வழங்கவும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதையடுத்து கட்சி பெயர், கொடி குறித்து தனது ஆதரவாளர்க ளுடன் தினகரன் தீவிர ஆலோசனை நடத்தினார். கட்சியின் பெயர் அறிவிப்பு விழா மதுரை மேலூரில் நடக்கும் என தினகரன் அறிவித்தார்.
அதைதொடர்ந்து, இன்று மதுரை மேலூரில் நடக்கும் விழாவில் கட்சிப் பெயர், கொடியை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்.