புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்(38). அதே ஊரை சேர்ந்தவர் குமார் மகன் சீனிவாசன் இருவரும் சில நாட்களுக்கு முன்பு இரவு ஒரு காரில் அண்டக்குளம் சாலையில் தர்ஹா வழியாக புதுக்கோட்டையில் இருந்து பூங்குடிக்கு சென்றுகொண்டிருந்தனர். புதுக்கோட்டை கால்நடை பண்ணை அருகே காட்டுப் பகுதியில் சென்ற இவர்களை இளைஞர்கள் கூட்டம் வழிமறித்து தாக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்று செந்தில்குமரனை அரிவாளால் வெட்டியதோடு அவரிடம் இருந்த 5.5 பவுன் நகைகள், ஏடிஎம் கார்டு, ரூ.15,000- பணத்தையும் பறித்துக் கொண்டு மிரட்டி ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது போல அடிக்கடி வழிப்பறி சம்வங்கள் நடக்கிறது. இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 30 ம் தேதி பூங்குடி மற்றும் அதனைச் சுற்றிய கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் விசாரித்து வந்தனர். அதில், செந்தில்குமரனின் ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஏடிஎம் மெஷினில் பணம் எடுத்துள்ளது தெரிய வந்தது. அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை கிழக்கு 4-ம் வீதியைச் சேர்ந்த தினேஷ்(20), ராசாப்பட்டியைச் சேர்ந்த தயாநிதி(19), போஸ் நகரை சேர்ந்த யோகமணி(22), அசோக் நகரை சேர்ந்த ரூபன்(19), கீரனூர் பழைய மீன் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த விஜயபிரசாத்(18) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரித்துள்ளனர்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தம்பி ஓட முயன்ற தினேஷ் மற்றும் விஜயபிரசாத் ஆகியோர் தடுமாறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். இதில் விஜய் பிரசாத்துக்கு கையிலும் தினேஷுக்கு காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வழிப்பறி சம்பவத்திற்கு முன்பு இந்த வழிப்பறிக்கும்பல் அரிவாளை பல்லில் கடித்துக்கொண்டு ஆட்டம் போட்ட வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.