நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கோவை, செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ''நாடாளுமன்றத்தில் அதானி பற்றி பேசிய போது என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெரிய தத்துவ போராட்டம் நடக்கிறது. மோடி அரசு போக வேண்டிய நேரம் இது. மத்தியில் உள்ளது மோடி அரசு அல்ல இது அதானியின் அரசு. அதானி விரும்பியதால் சில மாதங்களில் மும்பை விமான நிலையம் அவரது கைக்குச் சென்றது. அதானியின் சலுகைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எம்பி பதவி மட்டுமின்றி எனது வீட்டையும் பறித்தனர். இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் எனக்கு உள்ளது. தமிழர்களின் வீடுகள் எனக்காக எப்போதும் திறந்திருக்கும். எனது வீட்டை எடுத்துக் கொண்ட போது கூட நான் கவலைப்படவில்லை. தமிழர்களுக்கு எனத் தனியாக வரலாறு இருக்கிறது. தமிழர் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை நீட். நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பதை, உங்கள் வசமே விட்டு விடுகிறோம். வேலைவாய்ப்பின்மையைப் போக்க, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை கொண்டு வருவோம். அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இங்கு வந்தால் தோசை பிடிக்கும் என்று கூறும் மோடி இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது தாக்குதல் நடத்துகிறார். தோசை மட்டுமல்ல மோடிக்கு வடையும் கூட பிடிக்கலாம். ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல. தமிழ் மொழி பிடிக்குமா என்பதே கேள்வி. எங்கள் மொழி மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் எனத் தமிழ் மக்கள் மோடியிடம் கேட்கிறார்கள். மோடிக்கு தமிழ்நாட்டை பிடிக்குமா? அப்படி என்றால் தமிழர்களுக்காக அவர் என்ன செய்தார். தமிழகத்தில் இருந்து வெளியே சென்றதும் ஒரே மொழி ஒரே நாடு என்று சொல்கிறார் மோடி''என்றார்.