நியூஸ் ஜெ தொடக்க விழாவில் மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம் பெறாததால் பெண் நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.
அதிமுகவில் இபிஎஸ்,ஓபிஎஸ் ,தினகரன் அணியின் பிரச்சனையின் போது ஜெயா தொலைக்காட்சி டிடிவி தினகரன் தரப்பிடம் சென்றது. ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழை மீட்க கடுமையான முயற்சிகளை ஒபிஎஸ்- இபிஎஸ் மேற்கொண்டும் கடைசியில் பயனில்லை. அதன் பின்னர் அதிமுக சார்பில் நமது அம்மா நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இன்று நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்கம் விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.இதில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தொடக்கத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மேடையில் இருந்த டிஜிட்டல் திரையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. மேடையின் கீழே இருந்த சென்னையை சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர்கள் "அம்மா படம் எங்கே அம்மா படம் எங்கே" என்று கூச்சலிடவே மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்த நிர்மலா பெரியசாமி படம் வரும் வரும் என்று மைக்கிலே சொன்னார். அதன் பின்னரே ஜெயலலிதாவின் பெரிய படம் டிஜிட்டல் திரையில் தோன்றியது.