Skip to main content

தங்கப்பதக்கம் எங்கே? பரிசு ரூ.1 லட்சம் எங்கே? - காரியாபட்டி கல்லூரி மாணவி குமுறல் வீடியோ வைரல்!

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Where is the gold medal? Where is the prize of Rs 1 lakh? - Kariyapatti College student's video viral!

 

காரியாபட்டியில் உள்ள சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு தங்க மெடல் வழங்குவதாகத் தெரிவித்துவிட்டு பித்தளை மெடல் வழங்கி ஏமாற்றிவிட்டதாக  சமூக வலைத்தளத்தில் மாணவி ஒருவர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

விருதுநகர் மாவட்டம் -  காரியாபட்டி அருகிலுள்ள  சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தர்மராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு  பட்டம் வழங்கி கௌரவப்படுத்தினர்.

 

இந்தக் கல்லூரியில் மாணவ-மாணவியர் சேர்க்கையின்போது, யுனிவர்சிட்டி ரேங்க் எடுப்பவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும், தங்கப் பதக்கமும்  வழங்குவோம் என மாணவ,  மாணவியர் மற்றும் பெற்றோர்களிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இக்கல்லூரியில் 2017 முதல் 2020 வரை  வணிகவியல் பாடப் பிரிவு படித்த மாணவி தீபலெட்சுமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.  மேலும்,  பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடம், நான்காவது இடம், ஆறாவது இடம் பிடித்து மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இவர்களை, தங்கப்பதக்கம் வென்றவர்கள் எனக் கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவித்து, மாணவர் சேர்க்கைக்காக சுவரொட்டிகளில் விளம்பரம் செய்துள்ளனர்.

 

பட்டமளிப்பு விழாவிலோ  மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்களுக்கு  ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொடுக்காமலும்,  தங்க பதக்கத்துக்கு பதிலாகப் பித்தளைப் பதக்கமும் வழங்கியிருக்கின்றனர். அதனால், பல்கலைக்கழக முதலிடங்களைப் பிடித்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த மாணவ, மாணவிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அதனால், கல்லூரி நிர்வாகம் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர். முதலிடம் பிடித்து சாதனை படைத்த அந்தக் கல்லூரி மாணவியின் குமுறல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்