தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'அதிமுக ஆட்சி காலத்தில்தான் போக்குவரத்து இழப்பில் இருந்ததா? அதற்கு முன்னாடி இல்லையா? மின்துறைக்கு, போக்குவரத்து துறைக்கு எதுக்குமே இழப்பு இல்லாமல் இருந்ததா? இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டீர்கள். நீங்கள் மாறி மாறி இதையே தான் சொல்கிறீர்கள். அவர்களைக் கேட்டால் இவர்கள் ஆட்சியில் இப்படி ஆகிவிட்டது என்றும் இவர்களை கேட்டால் அவர்கள் ஆட்சியில் தான் இப்படி ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
ரொம்ப எளிதான கேள்விதான் ஊதியத்தில் பிடித்த பிடிப்பு பணம் அதற்கு நிலுவைத் தொகை என வைத்துள்ளீர்கள். ஓய்வு பெற்ற பிறகு கொடுக்கக்கூடிய தொகை அந்த பணம் 7500 கோடி எங்கே என்று சொல்லுங்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று. அரசு மக்களை ஏமாற்றிவிட்டது. திருடிவிட்டது அவர்களுடைய உழைப்பை.
முதலில் பேருந்தை பேருந்தாக வையுங்கள். பேருந்து செல்வதற்கு நல்ல சாலைகளை போடுங்கள். பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்களுக்கு சரியான ஊதியத்தை கொடுங்க. அவர்களுக்கு பிடித்து வைத்த பணத்தை முறையாக கொடுத்தால் நேர்மையான அரசு, உண்மையான அரசு. ஆனால் பிடித்த பணம் எங்கே? இதேபோல டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஒரு மாசம் சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி விடுவீங்களா? இதேபோல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை செய்ய முடியாது என வெளியே வந்தால் ஒரே நாளில் தீர்வு காண்பீர்களா? காண மாட்டீர்களா?''என்று கேள்வி எழுப்பினார்.