பல்வேறு கட்ட போராட்டங்கள், பல தடைகளை தாண்டி மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்பட்டது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பாசன ஆறுகள், துணை வாய்க்கால்கள் தூர் எடுக்காமல் புதராக இருக்கிறது அதை கடந்து கடைமடை வரை தண்ணீர் வருமா என்கிற கவலையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு மேட்டூர் அனை திறப்பது வழக்கம், கடந்த சில ஆண்டுகளாக சரியான காலத்தில் தண்ணீர் திறக்காமல் ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்தனர். "மேட்டூரில் தண்ணீர் இருந்தால் தானே திறக்க முடியும்," என அதிமுக அரசு காரணம் கூறி தப்பித்துக் கொண்டது.
இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து அங்குள்ள அனைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூரின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 105 அடியை எட்டியதையொட்டி இன்று எடப்பாடி பழனிச்சாமியே அணையை திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா பாசனங்களுக்கு பயன்படாத நிலையே இருக்கிறது. திறக்கப்பட்ட தண்ணீர் கடலுக்கு போகும் நிலையில் தான் இன்றைக்கு ஆறுகள் வாய்க்கால்களின் நிலமை இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.
இது குறித்து விவசாய சங்க பிரமுகர்களிடம் கேட்டோம், "எப்போதுமே தமிழக அரசு நனைந்து சுமக்கிற அரசாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு குடி மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடியில் 10 கோடிக் கூட முழுமையா செலவிடவில்லை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை விவசாயிகள் ஆதாரத்தோடு வெளியிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கு விவசாய சங்களை கொண்டே குடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறி, பணிகளை கண்காணிக்க ககன்தீப் சிங், அமுதா, பங்கஜ் குமார் பன்சால், ராஜேந்திர ரத்னு, ஆசிஷ் வச்சாணி, தாரேஸ் அகமது, கோபால் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமிக்கப்பட்டது.
அதே போல் இந்த ஆண்டு குடி மராமத்துக்கு 328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 10% கூட இன்னும் பணிகள் நடக்கவில்லை. திருவாரூர் மாவட்டத்திற்கு 18.35 கோடியும், நாகை மாவட்டத்திற்கு ஒரு கோடியும், தஞ்சை மாவட்டத்திற்கு 11.09 கோடியும் ஒதுக்கி வழக்கம் போலவே ஒப்பந்தக்காரர்களை கொண்டே பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் எந்த பணிகளும் முழுமை அடையவில்லை. இந்த நிலமையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலுக்கு தான் போகும், பாசனத்திற்கு உதவாது. இந்த ஆண்டும் மழை, வெள்ளப் பாதிப்பு அதிகம் இருக்கும், ஒதுக்கின நிதியை ஐந்து மாதங்களுக்கு முன்னாடியே ஒதுக்கி பணிகளை துவக்கியிருந்தா பாதியளவு பணிகளாவது நடந்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் ஒதுக்கி கட்டிக்காரவுங்கள சம்பாதிக்க செய்துட்டாங்க." என வேதனையோடு கூறுகின்றனர்.