முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் கைதிகளாக வேலூர் மத்தியச் சிறையில் கடந்த 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் முருகன், நளினி, சாந்தன் உட்பட 6 பேர். இதில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தனிடம் அவரது வழக்கறிஞர் ராஜகுரு தெரிவித்தார். அதோடு வழக்கு விசாரணை பற்றிய தகவலை சாந்தன், முருகன் இருவரிடமும் தெரிவித்தார்.
சிறைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ராஜகுரு, “இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும் இதற்காக உழைத்த வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சாந்தன் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார். பிறகு ஸ்ரீலங்கா செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு பாஸ்போர்ட் போன்ற உதவிகளைச் செய்ய கோரிக்கை வைத்துள்ளார். முருகன், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் வேலூரில் தனது மனைவியுடன் தானும் இருக்கப் போவதாக தெரிவித்தார்.” எனக் கூறினார்.