Skip to main content

குட்டி யானையின் உயிரிழப்புக்கு இதுதான் காரணம் - புலிகள் காப்பக இயக்குநர் விளக்கம் 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

What was the reason for the baby elephant's death?-Tiger reserve director explanation

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே கடந்த வாரம் காட்டிலிருந்து தாயைப் பிரிந்து வழித் தவறி வந்த குட்டி யானை ஒன்று அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறை குழுவினர் யானைக் குட்டியை கயிறு கட்டி மேலே தூக்கி காப்பாற்றினர்.

 

வெளியே கொண்டு வரப்பட்ட யானைக் குட்டியை ஆசுவாசப்படுத்தி வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட அந்த யானைக் குட்டியை மகேந்திரன் என்ற வன ஊழியர் ஒரு வாரமாக குளுக்கோஸ், இளநீர் போன்ற உணவுகளைக் கொடுத்து பராமரித்து வந்தார். இந்த நிலையில் யானைக் குட்டியை முதுமலையில் உள்ள யானைப் பாகன் பொம்மனிடம் கொடுத்து வளர்க்கலாம் என வனத்துறை முடிவு செய்தது. அதற்காக யானை குட்டியானது முதுமலை சரணாலயத்திற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுது ஒரு வாரம் பழகிய யானைக் குட்டியைப் பிரிய மனமில்லாமல் வன ஊழியர் மகேந்திரன் தேம்பித் தேம்பி அழுதார். இது அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

 

பின்னர் அந்த யானை ஆஸ்கர் தம்பதிகள் பொம்மன் பெள்ளியிடம் வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மூன்று மாத யானைக் குட்டியானது தெப்பக்காடு முகாமில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், யானைக் குட்டியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. இதனை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ளார். அதில் குட்டி யானை அஜீரண குறைபாடு மற்றும் லேசான நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளது. நுரையீரலில் நிமோனியா தொற்று லேசாக ஏற்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்