அண்மையில் காஞ்சிபுரத்தின் பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் எனும் பிரபல யூடியூபர் வாகன சாதத்தில் ஈடுபட்ட பொழுது விபத்துக்குள்ளானார். காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், பலமுறை ஜாமீன் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. தொடர்ந்து அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. அதன் காரணமாக டிடிஎஃப் வாசன் அங்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்வது வழக்கம். அவர் வரும்போதெல்லாம் இளைஞர்கள் அங்கு கூடுவது தொடர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று டிடிஎஃப் வாசன் வர இருந்ததால், கூட்டம் கூடியது. இதனால் செய்தியாளர்களும் கூடினர். கூடிய இளைஞர்கள் டிடிஎப் வாசனை சுற்றி சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
அங்கு நின்றிருந்த செய்தியாளர்களிடம் காஞ்சிபுரம் பகுதியில் ஊரகத் துறையில் குடிநீர் ஆபரேட்டராக வேலை செய்யும் முதியவர் ஒருவர் பேசினார். ''சாகசம் என்ற பெயரில் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. போற வர பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சில இளைஞர்கள் செல்கின்றனர். இந்த சாகசங்களுக்கு தமிழக அரசு தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிக அதிகமான வேகத்தில் செல்லும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். டிடிஎஃப் வாசன் என்னமோ உலக அதிசயம் மாதிரி பார்த்துகிட்டு இருக்காங்க. சமூகத்திற்கு சீர்கேடான வேலை இதெல்லாம். இந்த சமூகம் சீர்கேட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் நடிகர் விவேக்கிற்கு நினைவு நாள் வந்தது. அதுக்கெல்லாம் ஏதாவது மரம் நடலாம். அதுபோன்றுதான் செய்யலாம். அதை விட்டு இதெல்லாம் என்ன நல்லது'' என தனது ஆதங்கத்தை கொட்டினார்.
அப்பொழுது அங்கு வந்த டிடிஎப் வாசனின் ரசிகரான இளைஞர் ஒருவர் ''அவர் இஷ்டம் ஓட்டுறாரு. அவர் கஷ்டப்பட்டு சப்ஸ்கிரைபர் வாங்கி ஓட்டுறாரு'' என்றார். அதற்கு அந்த பெரியவர் ''அவர் கஷ்டப்பட்டு ஓட்டுறாரு என்றால் அவருடைய சொந்த நிலத்தில் ஓட்டுங்க. ரோட்ல போற எங்களை ஏன் பயமுறுத்த மாதிரி ஏன் ஓட்ட வேண்டும்'' என்றார். அதற்கு அந்த இளைஞர், 'கோடிக்கணக்கான பேன்சுங்க இருக்காங்க அவங்களுக்கு. நீங்க என்ன கட்சியில் இருக்கீங்க'' என்று கேட்க, அந்த முதியவர் 'நான் விவசாயி' என்றார். இப்படியாக அந்த முதியவரும் அந்த இளைஞரும் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.