தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவானது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா என்ன ஆனது; மசோதா மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
உள்துறை, சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உயர் கல்வித்துறை ஆகிய ஒன்றிய அரசின் துறைகள் மாநில சட்டப் பேரவையில் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் அதுதான் ஜனநாயகமாக இருக்க முடியும் என வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் அவர் எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் அலுவலகம் பதிலளித்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.