கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் ‘தமிழ் அன்னை’ படகு தேக்கடி ஏரியில் காட்சி பொருளாக உள்ளது. பெரியாறு அணையில் சமீபத்தில் ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்த கேள்விக்கு, “கேரளாவைப் போல் தமிழக நீர்ப்பாசனத் துறை சார்பில் விரைவில் விரைவு படகு வாங்கப்படும்” என்று பதில் கூறினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் இருக்கும் தேக்கடி படகு நிறுத்தும் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வர தமிழக பொதுப்பணித் துறைக்கு ‘கண்ணகி, ஜலரத்னா’ என்ற இரண்டு படகுகள் உள்ளன. இது 36 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளதால் கடந்த 2014ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டீல் படகு வாங்கப்பட்டது. அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது தேக்கடியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் படகை வாங்கி 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதை இயக்க இதுவரை கேரள அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் திறன் இருப்பதாக கேரள அரசு தரப்பில் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. அதே வேளையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரித்ததாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. அப்படி இருந்தும் தொடர்ந்து அனுமதி கொடுக்காததால் படகு இயங்காமல் இருக்கின்றது.
இந்த நிலையில்தான், கடந்த 5ஆம் தேதி முல்லை பெரியாறு அணைக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடம் தமிழ் அன்னை படகு இயக்குவதில் தாமதம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், “கேரளாவைப் போல் தமிழக நீர்ப்பாசனத் துறை சார்பில் விரைவில் விரைவு படகு வாங்கப்படும்” என்று கூறினார். இதனால் ஏற்கனவே வாங்கிய படகுக்கு செலவிடப்பட்ட ஒரு கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.