Skip to main content

'செல்லூர் ராஜு சொன்னது உண்மை; எடப்பாடிக்கு தான் புத்தி வரவேண்டும்'-புகழேந்தி பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'What Sellur Raju said is true; "Edappadi should come to his senses" - Pugahendi interview

காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 தேதியான இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஓசூரில் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகழேந்தி காமராஜர் சிலைக்கு மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ''குழந்தைகளுக்கான இலவச உணவு திட்டத்தை அமுல்படுத்தி, இலவச கல்வியை தோற்றுவித்த ஏழை பங்காளனாக, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக விளங்கியவர் காமராஜர். அவருடைய பிறந்தநாளை இன்றைய தினம் நான் இங்கே உள்ள நிர்வாகிகளோடு கொண்டாடி உள்ளேன். அதிமுகவில் ஒற்றுமை வரவேண்டும் என்பது மனதார வரவேண்டும் வாயிலேயே பேசிக்கொண்டு இருந்தால் ஆகாது. கூப்பிட்டு சேர்த்து வைத்து விடுவேன் என்று ஒருவரும்; எந்த தியாகமும் செய்ய தயார் என்று இன்னொருவரும்; முடியவே முடியாது என்று இன்னொருவரும்; கட்சி நாசமாக போகட்டும் என நினைக்கும் பழனிசாமியும் என இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் மாற வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்தால் தான் அதிமுக காப்பாற்றப்படும் என்பது என்னுடைய கருத்து அல்ல தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து. அதற்கு வழி வகுக்க வேண்டும். அதற்கு தான் பாடுபடுகிறோம். இதில் சரியாக வரவில்லை என்றால் மக்கள் மத்தியில் அவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுவதற்கு இந்த ஒருங்கிணைப்பு குழு தயங்காது. மனதார காமராஜர் பிறந்தநாளில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மதுரையில் இருந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்ன தெரியுமா சொல்லி இருக்கிறார் 'நாங்கள் என்ன காமராஜரா? நாங்கள் என்ன எம்.ஜி.ஆரா? நாங்கள் என்ன ஜெயலலிதாவா? கூவி கூவி ஓட்டு கேட்டாலும் போட மாட்டேன் என்கிறார்கள். அதனால் தான் மூன்றாவது இடத்துக்கு போய்விட்டோம். மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. கூவி கூவி ஓட்டு கேட்டும் ஓட்டு போடவில்லையே' என்று செல்லூர் ராஜூ சொல்கிறார்.

அப்பொழுது அவருடைய தலைமை யார்? அவர் தலைமையாக ஏற்றுக் கொண்டிருப்பவர் பழனிசாமி. இப்பொழுதாவது பழனிசாமிக்கு புரியுமா? செல்லூர் ராஜு சொன்னது உண்மை. சென்ற மாதம் ராகுல் காந்தியை பாராட்டினார் மனதார வரவேற்றோம். இப்பொழுது இன்னொரு உண்மையை சொல்லி விட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூவி கூவி ஓட்டு கேட்டாலும் 'தூ..' என துப்பி விட்டு போகிறார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக செல்லூர் ராஜு சொல்லி இருக்கிறார். இனி பழனிசாமிக்கு தான் புத்தி வரவேண்டும். தோற்றுப் போனதற்கு அவர் காரணம் சொல்ல வேண்டும். ஜெயலலிதா சொல்லுவார் இந்த தோல்வியை நானே ஒப்புக்கொள்கிறேன். இந்த தோல்வியை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வார். கலைஞர் கடிதம் எழுதுவார் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம். உன்னால் தான் அதிமுக தோற்றே போய்விட்டது. இதில் என்ன ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த தப்புக்கு யார் ஆய்வு செய்வது. செல்லூர் ராஜு உண்மையை சொல்லி உள்ளார் பாராட்டுகிறோம். ஏன் சி.வி.சண்முகம் இன்னும் அமைதியாக இருக்கிறார். நான் எதிர்பார்த்தது நியாயம், தைரியம் எல்லாம் சி.வி.சண்முகம் இடத்தில் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த தைரியம் எங்கோ ஒரு மதுரை மண்ணிலிருந்து வருகிறது. ஏன் விழுப்புரம் மண்ணில் இருந்தது வரவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை'' என்றார்.

சார்ந்த செய்திகள்