மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அழைத்துவரப்பட்டனர். புத்தகக் கண்காட்சி தொடக்க விழா என்பதால் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடைகளில் நிகழ்த்தப்பட்டது.
அப்பொழுது 'அங்கே இடி முழங்குது' என்ற கருப்பசாமி பாடல் ஒலிக்கப்பட்டது. அச்சமயம் கருப்பசாமி வேடமிட்ட ஒருவர் ஆடி வந்தார். இந்த பாடல் ஒலிக்க ஒலிக்க அங்கிருந்த மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர். இதனையடுத்து அங்குச் சுற்றி இருந்த மற்ற மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்தனர். மேலும் மாணவிகள் சாமியாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சில மாணவிகள் அயர்ச்சியில் கீழே விழுந்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள் மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.
அதே சமயம் அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடலை பாடியது ஏன்? என சிலர் கேள்வி எழுப்ப, விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அழைத்துவரப்பட்ட குழுவினர் பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பினர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. அதில் கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவே கருப்புசாமி வேடமணிந்து கிராமிய இசை பாடல் ஒலிபரப்பப்பட்டது. இது பக்தி பாடல் அல்ல, கிராமிய பாடல். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரி அமைச்சர் பி.மூர்த்தி இன்று (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இதுதொடர்பாக பேசுகையில், “இந்த விழாவில் நான், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பலரும் இருந்தோம். அதன் பின்னர் விழாவைத் தொடங்கி வைத்துவிட்டுச் சென்றுவிட்டோம். அதன் பின்னர் மதுரை புத்தகத் திருவிழாவில் தினமும் 2 மணி நேரம் கலை நிகழ்ச்சி நடைபெறும் எனச் சொன்னார்கள். கலை நிகழ்ச்சியில் பயன்படுத்தியது கிராமிய பாடல்கள் மட்டுமே. இதில் மதப் பாடலோ, சாதிப் பாடலோ இல்லை. இதில் மத சாயமோ, சாதி சாயமோ பூச வேண்டாம். அதற்கான அவசியமும் இல்லை. மதுரை அனைவருக்குமானது. தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.