96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்தில் கார்த்தியும் அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கோவையில் நடைபெற்றது. அவ்விழாவில் சூர்யா, கார்த்தி, அர்விந்த் சுவாமி உள்ளிட்ட படக்குழுவினருடன் சிவக்குமாரும் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “நம்ம பார்த்து பழகக்கூடிய நிறைய உறவுகள் இருக்கிறார்கள். நாங்கள் வளரும்போது அவர்கள் பார்த்துக்கொண்ட விதத்திற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. நம்ம வளரும்போது எதுவுமே எதிர்பார்க்காமல் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும், அன்பு கொடுக்க வேண்டும் என நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்தனர். அவர்களை நான் உயரத்தில் வைத்து அன்னாந்துதான் பார்க்கிறேன். இந்த மாதிரியான உறவை சொல்லுகிற படம்தான் மெய்யழகன். நான் இந்த படத்தை பார்த்த பிறகு, என் தொண்டையில் கல்லை வைத்து முழுங்க முடியாத மாதிரியான சந்தோஷமும் அழுகையும் இருந்தது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்த்துதான் கார்த்தியை கட்டிப்பிடித்தேன். 96 படம் மாதிரி இந்த படமும் ஒரே இரவில் நடக்கக்கூடிய படம்தான். ஜோதிகா எப்பவுமே கார்த்தியோட கதை தேர்வு பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்த படத்தில் கார்த்திக்கும் அர்விந்த் சுவாமிக்கும் இடையான உறவை பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தது. ரசிகர்கள் படத்தை படமாக பாருங்கள், வணிக ரீதியாக படம் என்ன வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம். படத்தை கொண்டாட மட்டும் தயாராவோம், விமர்சனம் செய்வதில் ரொம்ப ஆர்வம் காட்ட வேண்டாம்” என்றார்.
அதன் பிறகு கங்குவா ரிலீஸ் தேதி குறித்து பேசுகையில், “வெயில், மழை, கடல் என இரண்டரை வருஷம் ஆயிரம் பேருக்கு மேல், தமிழ் சினிமாவில் ஸ்பெஷலான படத்தை கொடுக்க வேண்டுமென இரவு பகலாக கங்குவா படக்குழு வேலை செய்துள்ளோம். அந்த உழைப்பு வீண் போகாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வருகிறது. நான் பிறக்கும்போது நடிக்க வந்தவர், கிட்டதட்ட 50 வருஷமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறவர் ரஜினிகாந்த். அதனால் அவரின் படம் வருவதுதான் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். கங்குவா ஒரு குழந்தை, அது பிறக்கும்போது கொண்டாட நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினி - த.செ ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் கங்குவா தள்ளி போக வாய்ப்புள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதை தற்போது உறுதி செய்துள்ளார் சூர்யா. இதையடுத்து ரஜினியிடம் சூர்யாவின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி, கங்குவா படமும் நன்றாக ஒடும்” என்று கூறினார்.