
திருச்சி மத்திய சிறையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் நேற்று (17.10.2021) காலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களைப் பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி, அதன் விபரங்களைக் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், சமையலறை, கைதிகள் தங்குமிடம், சிறை மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிறைவாசிகளுக்காக தயாரிக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டுப் பார்த்தார். பின்னர் கைதிகளிடம் கலந்துரையாடிய அவர், அவர்களுக்குப் போதிக்கப்படும் கல்வியின் நல்லொழுக்கம் குறித்தும் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட அவர்களுக்கான ‘பட்டம்’ எனும் திட்டத்தின் செயல்பாடு குறித்தும் ஆலோசித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் தமிழகத்தில் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில்தான் சிறைச்சாலையின் உள்ளே ஐ.டி.ஐ. பயிற்சி மையம் உள்ளது. சிறைக் காவலர்களின் கூடுதல் பணிக்கான தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படவிருக்கும் சிறைவாசிகளின் பட்டியல் இன்னும் மூன்று வாரங்களில் தயாராகிவிடும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் திமுக உறுதியாக உள்ளது. சிறையினுள்ளே செல்ஃபோன் பேசுவதைத் தவிர்க்க ஜாமர் கருவிகள் தரம் உயர்த்தப்படும். திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றுத்திட்டம் குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும்” என்று கூறினார். ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.