விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.
அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து தேர்தலுக்கான பரப்புரை கடந்த 8 ஆம் தேதி (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
இத்தகைய சூழலில் தான் இன்று (10.07.2024) காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை மும்முரமாக நடைபெற்றது. இதில் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 41 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகியுள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதே சமயம் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர் வாக்குச்சாவடியில் 102 வயது மூதாட்டி ஒருவர் நடந்து சென்று வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. பதிவான வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.