இரவு 10.20க்கு நளினிக்கு இந்திராகாந்தி சிலை அருகே என்ன வேலை? அவர் பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார் என முன்னாள் காவல் அதிகாரியும் ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷியா டெய்சி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து அவர்களை விடுதலை செய்தது.
இந்நிலையில் முன்னாள் காவல் அதிகாரியும் ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷியா டெய்சி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ராஜீவ்காந்தி படுகொலையின் போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். அப்போது நான் மிக மோசமாகக் காயமடைந்தேன். அதில் எனது இரு விரல்கள் போனது. நான் ராஜீவ்காந்தி படுகொலையின் போது குற்றவாளிகளைக் கண்ணால் கண்ட சாட்சி. இவ்வழக்கில் நளினி முதல் குற்றவாளி. அவருடன் சேர்ந்த 25 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்றவர்கள். பிறகு உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளின் தண்டனை மாற்றப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்தனர். இன்றைக்குச் சட்டத்தில் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சட்டத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நளினி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும் பொழுது பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார். சிறப்பு நீதிமன்றம் என்னுடைய சாட்சியத்தை மட்டுமே வைத்து அவருக்குத் தூக்குத் தண்டனையைக் கொடுக்கவில்லை. 1444 சாட்சிகளை விசாரணை செய்து ஆவணங்களின் அடிப்படையில் தான் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தார்கள்.
இந்திரா காந்தி சிலை அருகில் தான் இருந்தேன். நான் அந்த இடத்திலேயே இல்லை எனச் சொல்லுகிறார். எதற்கு அங்கு வந்தார்கள். எத்தனை மணிக்கு வந்தார். அவருக்கு அங்கு வர வேண்டிய வேலை என்ன? அவர் என்ன ஸ்ரீ பெரும்புதூர்காரரா அந்த இடத்திற்கு வருவதற்கு. இரவு 10.20க்கு குண்டினை வெடிக்கச் செய்தார்கள். இரவு 10 மணிக்கு நளினிக்கு இந்திரா காந்தி சிலைக்குப் பக்கத்தில் என்ன வேலை. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நாள் குறித்து பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்கள் எல்லாம் அவர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் இருப்பதாகத்தான் காட்டுகிறது” எனக் கூறினார்.