கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறுவது குற்றவாளிகளை பிடிப்பதை தாமதப்படுத்தும் செயல் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''பாஜக இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்பதற்கே காரணம் நோக்கம் புரிகிறது. அவர்களுடைய ஆட்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றுவதற்காக இதைக் கேட்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. மத்திய அரசு நினைத்தால் தேவைப்படுவோர் மீது இ.டி ரெய்டு விடுகிறார்கள். கட்சி மாறியவுடன் வாபஸ் பெறுகிறார்கள். சிபிஐ கேஸ் போடுகிறார்கள் கட்சி மாறியவுடன் வாபஸ் பெறுகிறார்கள். சிபிசிஐடி விசாரணையிலேயே உண்மை தெரிந்துவிடும். நேர்மையான விசாரணைக்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.