குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல தேன் அடை என தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர். பாளையம் திறந்தவெளி கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர். பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மோட்டார் மூலம் விநியோகிப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகார் குறித்து விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கிணற்றின் தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து மர்ம நபர்கள் கிணற்றில் மனித கழிவை கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்டது தேன் அடைதான் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை குடிநீர் வாரியப் பொறியாளர் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புகார் எழுந்த சமயத்தில் கிணற்றுக்குள் இறங்கி குடிநீர் வாரியப் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டதில் தேன் அடை என்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.