நாம் காணும் கனவு நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்...? அப்படியொரு கதையை மையமாக வைத்து வந்துள்ள படம் தான் கார்பன்.
நாயகன் விதார்த் காணும் கனவுகளெல்லாம் அப்படியே நிஜத்திலும் நடக்கின்றது.
ஒரு நாள் விதார்த் தன்னுடைய அப்பா மாரிமுத்து விபத்தில் சிக்குவது போல் கனவு காண்கிறார். அது நிஜத்திலும் நடந்துவிடுகிறது. அப்பா மாரிமுத்துவை மருத்துவமனையில் சேர்க்கிறார். அவர் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். மாரிமுத்துவுக்கு அறுவைசிகிச்சை செய்ய மருத்துவமனையில் 10 லட்சம் கேட்கின்றனர். தன் தந்தையை இடித்து சென்ற கார் டிரைவரை பிடித்து 10 லட்சம் நஷ்ட ஈடாக பெறுவதற்காக அவர் மீண்டும் தூங்கி அதே கனவை வரவழைக்க முயற்சி செய்கிறார். அந்தக் கனவில் இடித்து சென்ற நபரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். விதார்த்துக்கு மீண்டும் அதே கனவு வந்ததா, இடித்துச் சென்ற நபரை கண்டுபிடித்தாரா, அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் கிடைத்ததா? இல்லையா? என்பதே கார்பன் படத்தின் மீதி கதை.
ஒரு சிம்பிளான கதையை டைம் லூப் ஜானரில் கொடுத்து ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்ரீநுவாசன்.
காட்சிகளும் கதைக்களமும் சிறப்பாக அமைந்து இருந்தாலும் திரைக்கதை அதற்கேற்றார்போல் இல்லாதது ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டைம் லூப் சம்பந்தப்பட்ட காட்சிகள் அலுப்பை தருகின்றன. இருந்தும் ஒரு சின்ன கதையை திருப்திகரமான ஒரு முழு படமாக கொடுக்க எடுத்த முயற்சியில் இயக்குநர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்.
நாயகன் விதார்த் படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறிக் கொண்டே இருக்கிறார். தனக்கு சரியாக பொருந்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இவரது அலட்டல் இல்லாத உடல் மொழியும் அழுத்தமான நடிப்பும் கவனம் பெறுகிறது. நாயகி தண்யா பாலகிருஷ்ணன் ஆரம்பத்தில் சாந்தமாகவும் பிற்பாதியில் அதிரடியாகவும் தோன்றி கவனம் பெற்றுள்ளார். அதேபோல் இவரது கதாபாத்திரம் படத்துக்கு பக்கபலமாகவும் அமைந்துள்ளது.
தந்தையாக வரும் மாரிமுத்து இயல்பான நடிப்பை அழுத்தமாகவும், ரசிக்கும்படியும் வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றுள்ளார். இவரது அனுபவ நடிப்பு படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் அனைவரும் அவரவருக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஃபிரஷ்ஷாக இருக்கின்றன.
கதைக் களத்தில் இருந்த சுவாரசியத்தை திரைக்கதையிலும் பிரதிபலிக்கும்படி இருந்திருந்தால் டீசன்டான திரில்லர் படமாக மாற வாய்ப்பு இருந்திருக்கும்.
கார்பன் - இன்க் குறைவு!