திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை எல்லாம் மீறி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆட்கொணர்வு மனுவை செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு நீதிபதி வழக்கு விசாரணையில் இருந்து விலகிவிட்டதால் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது செந்தில் பாலாஜி கைதில் மீறப்பட்ட சட்டவிதிமுறைகள் குறித்தும் கூறப்பட்டது.
அமலாக்கத்துறையின் சார்பில், செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார் என்றும், முதன்மை அமர்வு நீதிபதி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட்டார். எனவே ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதல்ல என வாதிட்டார்கள். ஆனால் 2022ல் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில், எப்போதெல்லாம் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டோ நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்படும்போதோ சட்டவிரோதம் இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அதை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று வழங்கப்பட்டு இருந்த தீர்ப்பை எடுத்துக் காட்டினோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவுக்கு அனைத்து பதில்களையும் 22 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டு அவருக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கூறினோம். அதை அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்தது. எய்ம்ஸ்-இல் இருந்து சிறப்பு மருத்துவர் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அனைத்தையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலிலேயே காவேரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் கூட எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு அமலாக்கத்துறையினர் பரிசோதனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்” எனக் கூறினார்.