நெல்லை அருகே கல்குவாரியின் ராட்சத பாறைகள் 300 அடி உயரத்திலிருந்து பெயர்ந்து விழுந்ததால் இடிபாடுகளில் 6 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் மாவட்டத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் காவல் லிமிட்டில் வருகிற பொன்னாக்குடி கிராமத்தின் பின்பக்கமுள்ளது அடைமிதிப்பான் குளம். இங்குள்ள குன்றின் கல்குவாரியை எடுத்திருப்பவர் சங்கர். கல்குவாரியின் பாறைகளை வெடிவைத்து தகர்த்து, அதனைக் கிரஸ்ஸர் மூலம் பல சைசிலான ஜல்லிக் கற்கள் தயார் செய்வதுடன் எம்சாண்ட் தயாரிக்கவும், அனுப்பப்படுவதால் அந்தக் குவாரியில் இரவு பகல் என்று தொழிலாளர்கள் பணியிலிருந்திருக்கிறார்கள்.
இதனிடையே நேற்று (14/05/2022) வழக்கம் போல் இரவு நேரம் விதிகளை மீறி பாறைகளைப் பிளப்பதற்காக கல்குவாரியில் அடிப்புறத்தின் பல இடங்களில் துளையிட்டு கனமான அளவு வெடி வைத்து தகர்த்திருக்கிறார்கள். வெடியின் தாக்கம் பாறையின் 300 அடி உயரமுள்ள உச்சிப்பகுதி வரை ஊடுருவியிருக்கிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. வெடிவைத்த பின்பு இரவு சுமார் 12.00 மணியளவில் சிதறிய பாறைகளின் கற்களை அள்ளி லாரிகளில் லோடு செய்கிற பணியில் மூன்று பெரிய ஹிட்டாச்சிகள் மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்காக மூன்று லாரிகளும் பணியிலிருந்திருக்கின்றன.
அதுசமயம் 300 அடி உயரத்திலிருந்து பெரிய பாறை திடீரென்று சரிந்து கீழே பணியிலிருந்த ஹிட்டாச்சிகள் மற்றும் லாரிகளின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது. தொடர்ந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் அவை சிக்கிக் கொண்டன. அதோடு மூன்று ஹிட்டாச்சிகளின் 3 ஆபரேட்டர்கள், மூன்று லாரி டிரைவர்கள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனராம். இதுகுறித்த தகவலறிந்த மறுகணம் நடு இரவு 12.30 மணியளவில் மாவட்ட எஸ்.பி.யான சரவணன் முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர்.
மாவட்டத்தின் தீயணைப்பு மீட்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் காயமடைந்த முருகன், விஜய் 2 பேரை மீட்டனர். மற்றவர்களை மீட்பதற்கு விழுந்த பாறைகள் தடையாய் இருப்பதால் அதனை அப்புறப்படுத்த தூத்துக்குடியிலிருந்து ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உயரத்திலிருந்து பாறைகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருப்பதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரக்கோணத்திலிருந்து ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான தேசிய மீட்புப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் மீட்டுவிடுவோம் என்கின்றனர் ஸ்பாட்டிலுள்ள காவல் துறை அதிகாரிகள்.
விதிப்படி, ஒவ்வொரு 15 மீட்டர் ஆழத்திற்கும் பாதை போன்ற ரேம்ப் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்பட்சத்தில் திடீரென்று விழுகிற பாறைகள் அதன் மேல் விழுந்து விடும். தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். தொழிலாளர்களும் தப்பித்துவிடுவார்கள். ஆனால் அப்படி அமைக்கப்படாமல் விதியை மீறி 300 அடிக்கு கீழே போயிருக்கிறார்கள். இதற்கு யார் அனுமதித்தார்கள். மேலும் தற்போது மைன்ஸ் துறையினர் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டிய காலமிது. அவர்கள் முறைப்படி ஆய்வு செய்திருந்தால் இத்தனை பெரிய விபத்து ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் ஏரியாவாசிகள்.
இந்த விபத்து பற்றி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயம்பட்ட இருவருக்கும் உடனடியாக தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கல்குவாரிகளின் விதிமீறலே விபத்திற்கு காரணம் என்கிறார்கள்.