Mi17V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கு முன் விமானிகளின் செயல்பாடுகள் மற்றும் உரையாடல்கள் அதில் பதிவாகியிருக்கும் என்பதால், விசாரணையில் முக்கிய அங்கமாக கருப்புப் பெட்டி கருதப்படுகிறது. டெல்லி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து வந்த 60 பேர் கொண்ட குழுவினர், நேற்று (08/12/2021) முதல் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று (09/12/2021) காலை 10.00 மணியளவில் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் என்னும் இடத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது. அதனை மீட்ட ராணுவ குழுவினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அது டெல்லி அல்லது பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் உள்ள தகவல்கள் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்துகளின் போது, அதற்கான காரணங்களைக் கண்டறியப் பெரிதும் உதவியாக இருப்பவை 'Block Box' எனப்படும் கருப்புப் பெட்டிகளே! 'Block Box' என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
விமானத்தில் நிகழும் செயல்பாடுகளைப் பதிவு செய்யக் கண்டறியப்பட்டதே 'Block Box' எனப்படும் 'கருப்புப் பெட்டி'. விமானங்கள் விபத்தில் சிக்கினால் விபத்து நேர்வதற்கு முன் விமானிகள் என்ன பேசினார்கள், இறுதி நேரத்தில் என்ன நடந்தது? போன்ற விவரங்கள் அனைத்தும் கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும். அதனாலேயே விமான விபத்து விசாரணையின் போது கருப்புப் பெட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விமானத்தில் தகவல்களை பதிவு செய்ய இருவகையான கருவிகள் உள்ளன. ஒன்று 'FDR' எனப்படும் Flight Data Recorder. இது விமானம் பறந்த உயரம், வேகம், வானியல் சார்ந்த நிகழ்வுகள் உள்ளிட்ட தரவுகளை சேமிக்கும் பணிகளைச் செய்யும். 17 மணி நேரம் முதல் 25 மணி நேரம் வரை தகவல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது 'FDR'.
மற்றொன்று 'CVR' எனப்படும் 'Cockpit Voice Recorder'. இது விமானத்தில் விமானிகளுக்கு இடையே நடைபெறும் உரையாடல்களையும், விமானிகளின் அறையில் கேட்கும் ஒலிகளையும் இரண்டு மணி நேரத்திற்கு பதிவு செய்யும். இவ்விரு கருவிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விமானத்தின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். விபத்துகள் நேரும் போது வாள் பகுதியில் சேதம் குறைவாக ஏற்படும் என்பதால், கருப்புப் பெட்டிகளைப் பொறுத்த அவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும், அது கருப்பாகவும் இருக்காது. பெட்டி போன்ற அமைப்பிலும் இருக்காது. கருப்புப் பெட்டி என்பது எளிதில் கண்டறியும் விதமாக, பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். 300 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் விழுந்தாலும் கருப்புப் பெட்டியில் சேதம் ஏற்படாது. 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரிந்தாலும், 20,000 அடிக்கு கீழே கடல் நீரில் மூழ்கினாலும் கருப்புப் பெட்டி எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
காணாமல் போன 30 நாட்கள் வரை அல்ட்ராசோனிக் சிக்னல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். இதன் மூலம், அது எந்த இடத்தில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என சொல்லப்படுகிறது. இப்படி அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட கருப்புப் பெட்டியில் சேகரிக்கப்படும் தகவல்கள், விமான விபத்து விசாரணைகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.