தஞ்சையில் வங்கியில் பணியாற்றிய பெண் மேலாளரை கணவரே அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சை விக்டோரியா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுந்தர் கணேஷ் - நித்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நித்யா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர் கணேஷ் தனியார் வங்கியில் பணியாற்றிய நிலையில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டிலேயே இருந்துள்ளார். யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தாமரை, கோபி ஆகிய இரு இளைஞர்கள் இவர்கள் வீட்டுக்கு பால் சப்ளை செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் நித்யா கணவர் சுந்தர் கணேசுக்கு தெரியாமல் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு ஒன்றை விலக்கி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்ட கணவர் சுந்தர் கணேஷ் தனக்கு தெரியாமல் எப்படி வீடு வாங்கினாய் என சண்டையிட்டுள்ளார். அதேநேரம் அந்த வீட்டை விற்பது தொடர்பாக பால் விற்பனையாளர்களான கோபி, தாமரை ஆகிவரிடம் நித்யா பேசி வந்துள்ளார். ஆனால் மனைவி அந்த இரண்டு பேரில் யாரோ ஒருவரிடம் முறையற்ற தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்த சுந்தர் கணேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மனைவி செல்போனில் பேசுவதை கண்டு கோபமடைந்த சுந்தர் 'என்ன பேச்சு வேண்டி கிடக்கு' என எச்சரித்ததோடு, அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். அதே அரிவாளுடன் காரில் ஏறி பால் கடைக்கு சென்றுள்ளார். பால் கடையில் இருந்த கோபி தாமரை இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு காரில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.
இதில் நித்யா, கோபி, தாமரை மூன்று பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சுந்தர் கணேஷை தேடிவந்த நிலையில், செங்கிப்பட்டி அருகே காரை ஓட்டி சென்ற சுந்தர் கணேஷ் லாரி ஒன்றின் பக்கவாட்டில் மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.