தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு காட்டுத்தீயில் பலர் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த செய்திகள் வந்தவுடன் 12.03.2018 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. லாசர், மதுக்கூர் ராமலிங்கம், பி.சண்முகம், மதுரை மாநகர் மாவட்டத்திலிருந்து இரா.அண்ணாதுரை, இராதா, புறநகர் மாவட்டத்திலிருந்து சி. ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், தேனி மாவட்டத்திலிருந்து டி.வெங்கடேசன், ராஜப்பன், மாநில மனித உரிமை உப குழுவின் சார்பில் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் கொண்ட குழு குரங்கணி பகுதி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் சென்று இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள், குரங்கணி உள்ளுர் மக்கள் ஆகியோரை சந்தித்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக முதல் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், இளைஞர்களும், இளம்பெண்களும் அகால மரணமடைந்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தேனியில் துணை முதல்வரை சந்தித்து இது குறித்துக் கவலை தெரிவித்தும், இழப்பீடு, உயர்மட்ட விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினோம். உங்களோடு விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
இது வரை 16 இளம் உயிர்கள் பலியாகியிருப்பதும், காயமடைந்தவர்கள் வேறு சிலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதும் வேதனையளிக்கிறது. இச்சூழலில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசின் நடவடிக்கைக்காக முன்வைக்கிறோம்:
• இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 25 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும் 5 லட்ச ரூபாய் இழப்பீடும் அளிக்க வேண்டும்
• குரங்கணி உள்ளூர் மக்களும், மரக்காமலை, பாக்கியராஜ், காமராஜ், சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் கமண்டோ படை வீரர்களும் உயிரை துச்சமென மதித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதன் விளைவாகவே பலர் காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் அனைவருக்கும் வீரதீர செயல்களுக்கான பாராட்டு பத்திரம் மற்றும் அரசின் உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
• ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனினும், கீழ்க்கண்ட அம்சங்கள் அதன் வரையறைக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
• சம்பந்தப்பட்ட குழுக்கள் மலையேறும் முன்னரே இரண்டு நாட்களாக தீ எரிந்து கொண்டு இருந்த சூழலிலும் மலையேற்றத்திற்கான அனுமதி வனத்துறையால் அளிக்கப்பட்டது எப்படி, அனுமதி பெறவில்லை என்றால் வனத்துறையின் கண்காணிப்பு அந்தக்காட்டுப்பகுதியில் அறவே இல்லையா?
• இப்பேரிடர் நடந்ததற்கான காரணங்கள் எவை?
• மலையேற்ற குழுக்களின் பயிற்சியாளர்கள், அதற்கான கிளப்புகள் குறித்த விவரம் என்ன?
• தீத்தடுப்பு கோடுகள் போட்டு தீயணைப்புக்கான தகுந்த முன்தயாரிப்போடு அதிகாரிகள் ஏன் இல்லை? நான்கு நாட்களாக எரிந்து கொண்ட காட்டுத்தீயை அணைத்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?
மேற்கண்ட அம்சங்களையும் உள்ளடக்கிய விசாரணையைத் துரிதமாக நடத்தி இந்தப் பேரிடர் நடந்ததற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• காடுகளுக்குள் வழித்தடத்திற்கான அடையாள பலகைகள் வைக்க வேண்டும்.
• வனத்துறையிலும் தீயணைப்புத் துறையிலும் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
• தீயணைக்கும் கருவிகளை நவீனப்படுத்தி போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும்
விழிப்போடு இருந்திருந்தால் இந்த உயிர் சேதத்தை தவிர்த்திருக்க முடியும். இருப்பினும் இந்த கோர சம்பவம் குறித்த விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு இனி நிகழாவண்ணம் மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.