Skip to main content

வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஐகோர்ட் கேள்வி

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
hi

 

தேசிய நெடுஞ்சாலையில் வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்தமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், " மத்திய அரசின் கட்டுபாட்டில் 250 க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.   தேசிய நெடுஞ்சாலைகள் பலவற்றை நான்கு வழிசாலையாக மாற்றபட்டுள்ளது.  நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமாக கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்தியா முழுவதும் சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டபட்டது.

 

கன்னியாகுமரி - வாரனாசி, ஹரிசா - கொல்கத்தா ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவில் நீளமான நெடுஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகள் அமைக்கும்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டபட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக மூன்று மடங்கு புதிதாக மரங்களை நடவு செய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் புதிதாக மரங்களை நடவு செய்யவில்லை. மேலும் புதிதாக அமைக்கபட்ட  சாலைகளில் மரங்களை நடவு செய்யாமல் சுங்க கட்டணத்தை வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்களை நடவு செய்யாமல் சுங்க கட்டணம் வசூலிக்க இடைகால தடைவிதிக்க வேண்டும்.

 

தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரங்களை நடவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.   முந்தைய விசாரணையின் போது தேசிய நெடுஞ்சாலைகளில் வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்களை நடவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

ஆனால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் மரங்கள் நடவு செய்யாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.எனவே நீதிமன்ற பின்பற்றாத தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்