அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதிலிருந்து சனாதனம் குறித்த பேச்சுக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''இவர்களெல்லாம் பிறப்பதற்கு முன்பே முன்னேற்றங்கள், புரட்சிகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் இருந்து பலர் முன்னேற்ற கருத்துக்களை சொன்னார்கள் என்பதில் எந்த பாகுபாடும் இல்லை. கலைஞர் போன்றவர்களால் மட்டும்தான் இந்த உடன்கட்டை ஏறுவது நிறுத்தப்பட்டது என உதயநிதி பேசுகிறார். அதையெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் போக முடியாது. அது ஒரு வழிமுறை அந்த வழிமுறையை பின்பற்றித்தான் ஆக வேண்டும். சர்ச்சில் சில வழிமுறைகள் இருக்கிறது; மசூதியில் சில வழிமுறைகள் இருக்கிறது. சில கோவில்களில் சில வழிமுறைகள் இருக்கிறது. அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.
சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர் அறைக்கு நாம் சடார் என்று போக முடியாது. முதலமைச்சர் அறைக்குள் நான் போய்த்தான் ஆக வேண்டும் என யாராவது போக முடியுமா? அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது அல்லவா அதே மாதிரி தான் அந்தந்த இடத்திற்கு போக வேண்டியதற்கான வழிமுறையை நாம் மதிக்க வேண்டுமா வேண்டாமா. நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கிறேன் ஏற்றத்தாழ்வை பற்றி பேசுகிறீர்களே வேங்கை வயலுக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் வருவதற்கு முன்பு தமிழகத்தில் என்றாவது இதுபோல் நடந்ததா? அதற்கு ஒரு பதில் சொல்ல முடியவில்லை. ஏற்றத்தாழ்வுகளுக்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்பதைப் போல பேசுவதை நான் மறுக்கிறேன்'' என்றார்.