திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் வசித்துவருபவர் காமராஜ். இவரது மனைவி ஷோபா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமாவதற்கு முன்பு ஷோபா, திருப்பூரில் உள்ள தனியார் பணியன் தொழிற்சாலையில் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அப்போது அதே தொழிற்சாலையில் பணியாற்றிவந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ ராய் என்ற பெண்ணுடன் நண்பராகியுள்ளார்.
கரோனா இரண்டாம் அலையின்போது ஷோபாவை ஊருக்கு வரவைத்த பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஷோபா வேலைக்கு வராததால், அவரைப் பார்க்க கடந்த வாரம் ஜெய்ஸ்ரீ ராய், நாயக்கனேரி மலைக் கிராமத்திற்கு வந்து தோழியுடன் பத்து நாட்கள் காமராஜ் வீட்டில் தங்கியுள்ளார்.
பின்னர் அவர், சொந்த ஊருக்கு கிளம்புவதாக கூறிவிட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது ஷோபாவும் அவரது கணவர் காமராஜூம் வழியனுப்பிவைக்க உடன் சென்றுள்ளனர். ரயில் கிளம்ப சிறிது நேரத்துக்கு முன்பு தண்ணீர் பாட்டில் வாங்கி வருமாறு காமராஜிடம் ஜெய்ஸ்ரீ ராய் கூறியதால் காமராஜ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். அப்போது ரயில் புறப்பட்டுள்ளது, தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ஓடிவந்துள்ளார். ரயில் வேகம் எடுத்துள்ளது. பிளாட்ஃபார்மில் நின்றிருந்த ஷோபாவை காணவில்லை.
மனைவி இல்லாததால் அதிர்ச்சியடைந்த காமராஜ், ரயில்வே போலீசாரிடம் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் இருவரும் கொல்கத்தாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணவனை ஏமாற்றிவிட்டு தோழியைக் கடத்திச் சென்ற வடமாநில பெண்ணைப் பிடிக்கவும், ஷோபாவை அவரிடம் இருந்து மீட்கவும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
அந்தப் பெண் மீட்கப்பட்ட பிறகே கடத்தப்பட்டாரா அல்லது ஷோபா அவருடன் சென்றாரா, கடத்தப்பட்டார் என்றால் எதனால் என்பதும், அவராகவே தோழியுடன் சென்றார் என்றால் எதனால் என்பதும் தெரியவரும்.