தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் தமிழக அரசும் பங்கு கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளின் போது தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் இந்தாண்டு வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டச் செலவுக்காக ரூ.2,429 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த 3 ஆம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தைத் துவக்கி வைக்க உள்ளார். அதே போல் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சர்தார்ஜன் கார்டன் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை மக்களுக்கு வழங்க உள்ளார்.