அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா சரியான முறையில் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதை மண்டல அலுவலர்கள் உறுதிப்படுத்துவது அவசியம் என சேலம் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி 60 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப். 17) நடந்தது. மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அவர் பேசியது: ‘மண்டல அலுவலர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருள்களின் பட்டியல்களை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக வழங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளின் வரிசை எண்ணை சரிபார்க்க வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.வி.எம். இயந்திரம்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் வருகை புரிந்துள்ளனரா என்பதையும், வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் வருகை, வெப்கேமரா சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிக்கு தேவையான பொருள்கள் மற்றும் இ.வி.எம். இயந்திரங்கள், ரிசர்வ் ஆக வைக்கப்பட்டுள்ள இ.வி.எம்.கள் ஆகியவற்றையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இ.வி.எம். இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.’ இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் ஆலோசனைகளை வழங்கினார்.