கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை , திருவாரூர் , புதுக்கோகோட்டை மாவட்டங்களுக்கு தமிழக அரசால் வழங்கபடும் நிவாரண பொருட்களில் ஒன்றான போர்வைகளை கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமல் தனியார் விசைத்தறிகள் மூலம் தயார் செய்யப்படும் மலிவான, தரம் குறைந்த போர்வைகளை கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்வதை கண்டித்து ஈரோடு மாவட்டம்சென்னிமலை கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் இன்று சென்னிமலை குமரன் சிலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை,,சிவகிரி,தாண்டாம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் 200 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். இவர்கள் கைத்தறி நெசவு மூலம் தான் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். வருடந்தோறும் நெசவு நெய்யும் கைத்தறி போர்வைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து கொண்டு இவர்களுக்கு நூல் மற்றும் மானியத்துடன் கூடிய கூலியினை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 4 லட்சம் கைத்தறி போர்வைகள் விற்காமல் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்காக தமிழக அரசு தற்போது 6 லட்சம் போர்வைகளை தனியாரிடம் விசைத்தறி போர்வைகளை கொள்முதல் செய்து வருகிறது. எனவே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க கைத்தறி போர்வைகளை கோப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறி அனைத்து கூட்டுறவு சங்க நெசவாளர்களும் இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை 300 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!