சென்னையை அருகே இடியாப்பம் தராததால் பட்டதாரி இளைஞர்ளை போலீசார் அடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் வசித்துவந்த பட்டதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் சக பட்டதாரி இளைஞர்களுடன் சேர்ந்து குரோம்பேட்டை ராதா நகர் பிரதான சாலையில் இடியாப்பம் புட்டு கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அந்த கடைக்கு தினமும் வந்த சி 12 காவல் நிலையத்தை சேர்ந்த சுரேஷ் என்ற காவலர் காசு கொடுக்காமல் இடியாப்பம் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிலமுறை வாங்கி சென்ற இடியாப்பத்திற்கு காசு தராதது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இனி ஓசியில் இடியாப்பம் தர முடியாது என அந்த இளைஞர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் சென்றபோது அவர்கள் மதுபோதையிலிருந்ததாக போலீசார் நிறுத்தியுள்ளனர். அப்பொழுது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் தாக்கியதோடு காவல் நிலையம் அழைத்து சென்று சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. ஓசியில் இடியாப்பம் கேட்டு தராததால் போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தாக்கியதாக இளைஞர்களின் நண்பர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றதை கேட்ட போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.