அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தைக் கரோனா நிவாரண நிதிக்காக எடுத்துக்கொள்ளும் அரசாணையை வெளியிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், தற்போது வேகமாக பரவிவரும் கரோனாவின் தாக்கம் பலரது குடும்பங்களை சின்னாபின்னமாக்கிவருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளை செய்வதற்கு போதுமான நிதி ஆதாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திரட்டிவரும் நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகிய எங்களுடைய மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை மனமுவந்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, அதற்கான அரசாணையை தாங்கள் விரைவில் வெளியிட்டு நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதை வரவேற்கிறோம். அதேபோல் தமிழக அரசு முன்வைத்துள்ள திருத்தங்களை செய்தபின்புதான் மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஆசிரியர்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.