திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண்கள், பொதுமக்கள் போராடி டாஸ்மாக் கடையை மூடி வைத்த நிலையில் குடிமகன்கள் ஒன்று சேர்ந்து டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆரணி படவேடு சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை இருப்பது பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்துகிறது எனப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து புகார் மனு அளித்து அந்தக் கடையை அகற்றினார்கள்.
இதற்கு இடையே விநாயகபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் ஒன்றைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை அறிந்த கிராம பெண்கள் மற்றும் ஊர்மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் ஜெகதீசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் சேர்ந்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்தனர். டாஸ்மாக் கடையில்லாததால் அரசுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், நாங்கள் மது அருந்த அருகில் உள்ள களம்பூர் பகுதிக்கு சிரமப்பட்டு செல்வதாகவும் கூறி டாஸ்மாக் கடை திறக்கக் கோரி வலியுறுத்தினர்.