ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்த நிலையில், அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்க்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டானது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு ஸொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று.
ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு, அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடி அடையாளம். நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம். நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.