சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (23.07.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வணிகவரி ஆணையர் டி. ஜகந்நாதன், நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவிலேயே முதன்முதலாக வணிகப் பெருமக்களின் நலனுக்காக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியவர் கலைஞர். கடந்த 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி (25.09.1989) கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நல வாரியம் இன்று வரைக்கும் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது. முதலமைச்சரைத் தலைவராகவும், வணிகவரித்துறை அமைச்சரைத் துணைத்தலைவராகவும் கொண்டு இந்த நல வாரியம் அமைக்கப்பட்டது. கலைஞரால் இந்த வாரியம் உருவாக்கப்பட்ட போது அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி இந்த எண்ணிக்கையை 30 பேர்களாக அரசு உயர்த்தியது. இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது வாரியத்தின் துவக்க நிதியாக 2 கோடி ரூபாயாக இருந்தது. அது 2012-ஆம் ஆண்டு 5 கோடியாகவும், 2017-ஆம் ஆண்டு 10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது 4 கோடியே 5 இலட்சம் ரூபாய் திரட்டு நிதி கையிருப்பு உள்ளது. தொடக்கத்தில் நடைபாதை வணிகர்கள் இல்லாமல் மற்றவர்கள் 500 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி உறுப்பினர் ஆகலாம் என இருந்தது. இந்த உறுப்பினர் கட்டணத்தில் சலுகை தர அரசு முடிவெடுத்ததை உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
திமுக ஆட்சி அமைந்ததும், 15.7.2021 முதல் 14.10.2021 வரை மூன்று மாத காலத்திற்குள் உறுப்பினர்களாகச் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லை என்று அறிவித்தோம். பல்வேறு வணிகர் சங்க பேரமைப்புகள் இந்தச் சேவையை மேலும் நீட்டிக்கச் சொன்னார்கள். அதை ஏற்று 31.3.2022 வரை நீட்டித்தோம். இந்த சேவையின் வாயிலாக 40 ஆயிரத்து 994 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதுவரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம், தமிழ்நாடு மதிப்பும் கூட்டு வரிச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதுபோன்ற செயல்கள் நாங்கள் சொல்லி, நீங்கள் செய்வதாக இல்லாமல், நீங்களே முன்வந்து செய்வதாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழைக் காணமுடியவில்லை என்று யாரும் சொல்லக்கூடாது. அந்த அளவுக்கு பெயர் பலகைகளில் தமிழில் மாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது திமுக அரசின் கொள்கை” எனத் தெரிவித்தார்.