Skip to main content

“கால அவகாசம் வேண்டும்” - வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. மனு!

Published on 23/01/2025 | Edited on 23/01/2025
We need time CbCID in the Vengaivayal

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் என 737 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.  அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில்  குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை திறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு வந்த டிஎஸ்பி பால்பாண்டி மாற்றப்பட்டு புதிய விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கல்பனா நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்