முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் அமர்ந்து எழுத்தோவியம் தீட்டுவது போன்று 6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில், 30 டன் எடையில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
இந்த சிலைதிறப்பு நிகழ்வை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
கலைஞருக்கு நாம் சிலை வைக்கிறோம் என்று சொன்னால் அந்த சிலைகள் நம்முடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன, நம்முடைய இலக்குகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. நமக்கு உற்சாகத்தை ஊட்டி கொண்டிருக்கிறது. பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும். அண்ணா என்றால் மொழிப்பற்றும், இனஉணர்வும். கலைஞர் என்றால் சமூகநீதியும், மாநில சுயாட்சியும்.

இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும், மொழிப்பற்றுக்கும், இனப்பற்றுக்கும், சமூக நீதிக்கும், மாநில சுயாட்சி க்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் இப்போது உருவாகி இருக்கிறது. எனவேதான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் தேவைப்படுகிறார். அதைவிட அதிகம் தேவைப்படுகிறார் என்பதை நாம் உணருகிறோம். காரணம் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில், வேலை வாய்ப்பில் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டார்கள். அவர்களை மேலே கொண்டுவரப்பட்ட சமூகநீதியே இட ஒதுக்கீடு என்பதாகும். அந்த கொள்கைக்கு உலை வைக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார அளவுகோல் இன்று கொண்டு வந்திருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டு கொள்கையால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லி வந்தவர்கள் இன்று அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதேபோல்தான் மாநில சுயாட்சிக் கொள்கையை ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே அடையாள அட்டை ஒரே தேர்வு என எல்லாவற்றையும் டெல்லியிலே குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு என்பது இன்று மத்தியபடுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது.
இதனால்தான் 1971 ஆம் ஆண்டிலேயே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார் நம்முடைய கலைஞர். மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் கமிஷனை அமைத்தவர் கலைஞர். ஏன் இந்தியாவிலேயே அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட நேரத்தில் ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல், கட்சியை பற்றிக்கூட கவலைப்படாமல் ஜனநாயகம் தான் முக்கியம் என்ற உணர்வோடு கலைஞர் சொன்னாரே இதைத்தான் நாம் அவரது நினைவு நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என பேசினார்.