'ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. உலக வர்த்தக சூழலுக்கு ஏற்றவாறு மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஆடை, அணிகலன் ஏற்றுமதியில் 58 விழுக்காடு தமிழகம் பங்கு வகிக்கிறது. இது நமது பெருமையாகும்.
இந்த வெற்றி ஒவ்வொரு தமிழருக்கான வெற்றி. ஆனால் இந்த வெற்றியோடு நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. இந்த விழுக்காட்டின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டும். பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி என்பதை அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். காஞ்சிபுரம், ஆரணி சின்னாளப்பட்டி சேலைகள் உள்ளிட்ட புவிசார் குறியீடுகொண்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு, தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும். உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் 'மேட் இன் இந்தியா' என்று சொல்வதைப் போல், 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசையும், லட்சியமும்'' என்றார்.
இந்த நிகழ்வில் ரூபாய் 2,210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.