ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் 'கோயில்கள் அறிவோம்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவன் அ.முகம்மது சகாபுதீன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பள்ளித் தலைமையாசிரியர் இ.சண்முகநாதன் பேசியபோது, "கோயில்கள் நம் பண்பாட்டின் அடையாளமாக உள்ளன. பள்ளிப் பாடநூல்களில் நமது பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சிகள் கோயில்கள் பற்றி மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன" என்று கூறினார்.
"தமிழ்நாட்டின் கோயில்கள் பண்பாடு, அறிவியல், மருத்துவம், கல்வி, கலை, வரலாறு, தொல்லியல் ஆகியவற்றின் அருங்காட்சியகங்களாக விளங்குகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய கோயில் கல்வெட்டுகள் உதவுகின்றன. கோயில்களில் பின்பற்றப்பட்ட மரபு தொழில்நுட்பம் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. கோயில்களின் சிறப்புகளை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும்" என மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கருத்தரங்க அறிமுக உரையில் கேட்டுக் கொண்டார்.
கருத்தரங்கத்தில் ஆலயம் பற்றி ரா.பைரோஸ், குடைவரைக் கோயில்கள் பற்றி ம.திவாகரன், கற்றளிகள் பற்றி ஜீ.ஹரிதா ஜீவா, பள்ளிப்படைக் கோயில்கள் பற்றி செ.கனிஷ்கா, மாடக்கோயில்கள் பற்றி பூ.பூஜாஸ்ரீ, கோயில் காப்புக் காடுகள் பற்றி ப.மகாஸ்ரீ ஆகியோர் பேசினர். ஆறாம் வகுப்பு மாணவி சா.சுபா நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் மு.தீபிகாஸ்ரீ, ஜெ.வித்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
புகைப்படக் கண்காட்சியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள், முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கற்கோயில்கள், பள்ளிப்படை, மாடக்கோயில்கள், காடுகள் சூழ்ந்த கோயில்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. படங்கள் பற்றி மாணவியர் விளக்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கு.முகம்மது காமில், ச.செல்வக்கண்ணன், பா.சாம்ராஜ், ப.யோகேஷ்வரன், முகேஷ்பிரியன் ஆகியோர் செய்தனர்.