மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்தியானந்தாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், நித்தியானந்தாவுக்கும் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆதீன மடத்திற்கு செல்லும் தேதியை நித்தியானந்தா முன்கூட்டியே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இளைய மடாதிபதி என்ற எண்ணத்தில் செல்லாமல் இந்திய குடிமகன் என்ற முறையில் தனிநபராக செல்ல வேண்டும். மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா செல்லும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடாது. ஆதீன மடத்திற்குள் அன்னதானம் உள்ளிட்ட செலவுகளை நித்தினானந்தாவே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதீன மடத்தில் பூஜை செய்ய உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு மீதான விசாரணையை அடுத்த நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.