கோட்டூர் அருகே பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க இருந்த நிலையில் கோவில் உள்ள பகுதி எனக்கூறி பள்ளி கட்டாமல் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் தடுத்ததால் பரபரப்பு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர், விக்கிரபாண்டியம் அருகில் உள்ள காாியமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த தொடக்க பள்ளி கடந்த கஜா புயலின்போது காற்றில் சேதமடைந்து பயன்படுத்த முடியாதநிலைக்கு மாறியது. அதே இடத்தில் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் இன்று துவங்கப்பட்டது.
அங்குவந்த அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் இந்த இடத்தில் பள்ளிகட்டிடம் கட்டகூடாது நாங்கள் சொல்லும் வேறு இடத்தில் தான் கட்ட வேண்டும் என்று தடுத்தது நிறுத்தி முரண்டுபிடித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி போலீஸார் குவிக்கப்பட்டது. அங்கு இருந்த அதிகாரிகளோ, "அரசு நிதி ஒதுக்கியுள்ள இந்த இடத்தில்தான் புதிய கட்டிடம் கட்டுவோம்" என தெரிவித்தனர், இந்து முன்னணியினரோ, "இங்கு கட்டிடம் கட்டக்கூடாது, அருகாமையில் கோயில் இருக்கிறது. அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் வந்தால் கோயிலுக்கு இடையூராக இருக்கும் எனவே நாங்கள் சொல்லும் வேறு இடத்தில்தான் கட்டவேண்டும்," என இந்து முன்னணியினர் போலீசாரிடமும், அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ஆர்.டி.ஓ. தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு பள்ளி கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.