தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரேசன் கடைகளில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வருகிறார். அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரங்கண்டநல்லூர் நெல் அரவை நிலையத்தையும், காணைக்குப்பம் ஊராட்சியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தையும், பெரும்பாக்கம் நியாய விலைக்கடையையும் அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையின்போது 505 தேர்தல் அறிக்கைகளை அறிவித்தார். அதை எதிர்க்கட்சிக்காரர்கள், ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்று சொன்னார்கள். ஆனால் 110 விதியின் கீழ் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவர்கள் ஆட்சியில் பல ஆயிரம் கோடிக்கு 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தவில்லை. அதை புத்தமாக வெளியிட்டிருக்கிறோம். கூட்டுறவுத் துறையின் கீழ் ரேசன் கடையையும் ஒரே துறையாக கொண்டு வரப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பும் கூடுதலாக தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் தெரிவித்து இருந்தார். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே என்ன என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். இன்னும் நான்கு வருடங்கள் மக்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அடுத்தும் நாங்கள் தான் தொடர்ந்து இருப்போம். அதனால் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு கிலோ உளுந்தம்பருப்பும் கூடிய விரைவில் மக்களுக்கு கொடுப்பார்” என்று கூறினார்.